ஒரு மழைநாளில்
என் தெருவாசியான அந்த நாய்
செம்மண் நிறத்தில் ரெண்டு,
கருப்புவெள்ளையாய் ஒன்று
பெயர்தெரியாத நிறத்தில் மூன்றென
ஆறு குட்டிகள் ஈன்றிருந்தது.
 
ஒருநாள் ஆபீஸிலிருந்து திரும்பும்போது,
கருப்புவெள்ளை குட்டி 
எதனாலேயோ இறந்திருந்தது.
செய்தித்தாள்களின் விளையாட்டுச் செய்திபோல்
விரும்பாமலும் கண்ணில் பட்டுத்தொலைத்தது.
 
அதைப்பார்த்த அவள்
சிலநாள் பாசத்திற்கு
வீடுவந்ததும்
தேம்பி அழுதாள்.
மணி பார்த்தவுடன்
கண்துடைத்து
வெங்காயம் வாங்கிவரச்சொல்லிவிட்டு
சமைக்கச்சென்றுவிட்டாள்.
 
வெங்காயம் வாங்கித் திரும்புகையில்
எங்கேயோ போயிருந்த
இறந்துப்போனதின் அம்மா
வந்து
அதை முகர்ந்துவிட்டு
அதற்கான உணவை
சாப்பிடச்சென்றுவிட்டது.
 
வீடுவந்ததும்,
கத்தரிக்காய் வதக்கிக்கொண்டிருந்த 
அவளின் சேலை வசீகரமாய் 
விலகி இருந்தது.
வெங்காயம் கொடுத்துவிட்டு
காதோரமாய் முத்தமிட்டதும்
வெட்கப்பட்டாள்.
 
ஏதோ டிவியின்
வானிலயறிக்கையில்
நாளை மீண்டும் மழைவருமென்றது.
Advertisements