ப்ராஜெக்ட் முடிக்க
ஓவர் டைமில் வேலைசெய்து திரும்பும் அவள்
பேச்சுத்துணைக்கு போன் செய்திருந்தாள்.
வழிதோறும் நடந்தவைகளை
ஒலிபரப்பிக்கொண்டிருக்கையில்
எதிர்ப்பட்ட
நொண்டி பிச்சைக்காரன்,
பீடி பிடிக்கும் ஆட்டோக்காரன்,
மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்
மேல் பட்டன் போடாத எவனோஒருவனென
எவருமே
நல்லவராய் தெரியவில்லையெனக்கு
அவள் வீடு சேரும்வரை.

அன்றொருநாள்
இரவு பதினொரு மணிவாக்கில்
இளஆரஞ்சு நிற சுடிதாரணிந்து
மாநிறமாய்
நீள்வட்ட முகத்தில்
அழகிய உதட்டுடன்
எனைப்பார்த்ததும்
மிரண்டு வேகமாய் நகர்ந்த எவளயோ
எதேச்சையாய் நினைவுக்கு வந்தது.

சட்டென்று
இந்த இரு சம்பவத்துக்கும்
சம்பந்தமில்லையென்று சொல்லிக்கொண்டது
உள்ளிருந்து ஏதோ
 

Advertisements