அவசரமாய் ஆம்புலன்ஸில் வந்து
எமர்ஜன்சி வார்டில் சேர்த்தபின்
உயிரை மீட்க வந்த உறவுகள்
மருத்துவமனையை பார்த்து
அமர்ந்திருந்த அந்த
வினை தீர்க்கும் விநாயகரிடம்
கதறி அழுது
காலில் விழுந்து
கெஞ்சினாலும்
அவர் சட்டை செய்வதே இல்லை.

அருகிலிருக்கும் எஸ்.டீ.டி பூத்தின் ரிசிவரில்
அவரின் காதுபட
கதறல்களையும்,
அழுகுரல்களையும்
அனுப்பிக்கொண்டே இருந்தாலும்
அவர் கொஞ்சமும் வருத்தப்படுவதில்லை.

உறவுகளின் உடல் நோவு தீர்க்கச் சொல்லி
க்யூவில் நின்று
மன்றாடும்போது
அவர் பார்ப்பதுகூட இல்லை

மாலை போட்டு
படையல் வைத்து
உண்டியலில் காசு போட்டாலும்
அவரை மாற்றமுடிவதில்லை!
பக்கத்து தெரு அருள்மிகு மீனாட்சி அம்மனும்
அப்படித்தான்.
கடவுள்கள் கறாரானவர்கள்!

கடவுள்கள் நாத்திக்கர்கள்!
மனிதர்களைவிட
கொள்கைகள் மட்டும்தான்
முக்கியம் அவர்களுக்கு.

தாக்கம்: கல்பற்றா நாராயணின் முரண்டு,
மொழிபெயர்ப்பு: ஜெயமோகன்.


Advertisements