நீ தெரியாதபோது
தகித்து எரிந்த இரவுகளில்
உனை தெரியாத தனிமை
ஒரு எதிரியாய் கடந்துசென்றது

நீ இருந்தபோது
நீ இல்லாத நேரங்களில்
அதே அழுத்தத்தின்
வேறு பரிமாணத்தில்
ஒரு மேகமாய் மாறி விட்டிருந்தது

நீ அருகிலிருக்கும்போது
நானில்லா உன் புகைப்படங்களில்
எட்டிப்பார்த்துவிடுகிறது என் தனிமை
எதிர் வீட்டு நாய்க்குட்டியாய்

எதேதோ சொல்லி
உன் கண்ணீரில் நம் காதலை
கரைத்த அந்த இரவிலிருந்து
ஒரு நண்பனாய் அருகே படுத்துக்கிடந்தது

இப்படி
தனிமையோடு சேர்ந்திருந்ததில்
என்னுடன் பழகிவிட்டிருந்தது
இப்போதெல்லாம்
என்னை விட்டு எங்கும் பிரிந்துபோவதேயில்லை
பர்சில் யாருக்கும் தெரியாமல்
வைத்திருக்கும் 
என் ராசியான கடவுள்போல

Advertisements