You are currently browsing the monthly archive for October 2008.

நீ தெரியாதபோது
தகித்து எரிந்த இரவுகளில்
உனை தெரியாத தனிமை
ஒரு எதிரியாய் கடந்துசென்றது

நீ இருந்தபோது
நீ இல்லாத நேரங்களில்
அதே அழுத்தத்தின்
வேறு பரிமாணத்தில்
ஒரு மேகமாய் மாறி விட்டிருந்தது

நீ அருகிலிருக்கும்போது
நானில்லா உன் புகைப்படங்களில்
எட்டிப்பார்த்துவிடுகிறது என் தனிமை
எதிர் வீட்டு நாய்க்குட்டியாய்

எதேதோ சொல்லி
உன் கண்ணீரில் நம் காதலை
கரைத்த அந்த இரவிலிருந்து
ஒரு நண்பனாய் அருகே படுத்துக்கிடந்தது

இப்படி
தனிமையோடு சேர்ந்திருந்ததில்
என்னுடன் பழகிவிட்டிருந்தது
இப்போதெல்லாம்
என்னை விட்டு எங்கும் பிரிந்துபோவதேயில்லை
பர்சில் யாருக்கும் தெரியாமல்
வைத்திருக்கும் 
என் ராசியான கடவுள்போல

Advertisements

‘சிறந்த மனிதர்கள்’ புத்தகம் படித்து
உணர்ச்சிப்பெருக்கில் வாங்கிய
புகைப்படத்தில்
என் சுவரில் உயிரோடிருந்த அந்த மகான்
சில மாதங்களுக்குள்
மரச்சட்டங்களுக்கான இடைவெளியில்
கொஞ்சம்கொஞ்சமாய் ஒழுகிவிட்டிருக்கிறார்.
இப்போதெல்லாம்,
அவர் அங்கிருப்பதாய் தெரிவதே இல்லை!

 

மதம், இனம், மொழி பார்த்து
நிச்சயித்து
அம்மி மிதித்து, அருந்ததியும் பார்த்து
முடிந்துவிட்ட நம் திருமணத்தின்
களவி மயக்கத்தை கடந்துவிட்ட பின்
அன்றோருநாளின் நம் உக்கிர சண்டையில்
தூங்காமல் விழித்திருந்த நடுஇரவில்
டிவியில் ஒளிபரப்பானது
கல்லூரியில் எனை யாசித்தவளுக்கு
பிடித்தபாடல்கள்…
நேயர்விருப்பமாய்!

எதேதோ பேசிவிட்டு
bye சொல்லி போன்-ஐ
யார் வைப்பதென்ற
நமக்குள்ளான
10 செகண்ட் அமைதியில்
எனக்கு தெரியாமல்
மெல்லமாய்
நீ சிரித்தபின்தான்
நம் போன் கால்கள்
நிறைவடைகிறன…

ஏதோ வேலையில் மூழ்கிஇருந்துவிட்டு
Gmail – Inbox (1)‘  என்று
browser-ல் பார்க்கும்போது
உனதாய் இருந்துவிடக்கூடதா 
அந்த mail?
ICICI Bank-ன் Credit card offer என்று படுத்துகிறதே!

இதுவரை எதுவும் செய்ததில்லை
என்னசெய்வதென்று தெரிந்ததில்லை
இன்னமும் தெரியவில்லை,
உனக்காக கண்ணீர்மட்டுமே சிந்தக்கூடிய
கையாளகாப் பொருள் நான்.
எரியமட்டுமே முடிகிறது என் இதயத்தால்
கருகுவதற்குமுன் விடிந்துவிடு
காத்திருக்கிறேன்!

For more Bloggers protest on Eelam

 

நீண்ட பயண முடிவின் முத்ற்சில நொடிகளில்
உயிரின் அடர்த்திக் குறைவை உணர்ந்துத் தொடர்கையில்,
பொறுமையின் நிதானத்துடன் என்னின் எதிரில் வந்து
ஆறுதலாய் தலைகோதி, தோள் தட்டி
நலம் விசாரித்த இருவர்
கடந்துகொண்டிருக்கும் பாதையின் பாதாள அபாயம் உணரும் ஒரு நொடி முன்னர்
எனைப் பிடித்து நிறுத்தும் சைகையில்
தள்ளுகிறார்கள் பாதாளத்தில்

அவசரமாய் கண் விழித்து, சோம்பல் முறிக்காமல் 
கனவில் வந்த இருவர்
நண்பர்களா, எதிரிகளா, கடவுள்களா, பிசாசுகளா என்ற யோசிப்பின்முடிவில்
பல்துலக்கும்போது யதார்த்தமாய் கண்ணாடியில் தெரிந்தது
அந்த இருவரின் சாயலும்!

 

தூரத்தில் அலைமாற்றம் செய்துகொண்டிருக்கும்
ரேடியோவுக்கு தெரியுமா தெரியவில்லை
அந்த பாடல் உன்னை ஞாபகப்படுத்துமென்று,
நீ பேசும்போது தேனாய் கேட்கவைக்கும் செல்போனுக்கு
தெரியுமா தெரியவில்லை
அதில் அதிகம் கலைந்துபோகிறேனென்று,
நீ முனகிய பாடலை ஒளிபரப்பும் சன் டிவிக்கும்
அதை அழகாய் காண்பிக்கும் என் வீட்டு டிவிக்கும் தெரியுமா தெரியவில்லை
அதில் நீ தெரிகிறாய்யென்று.
இவை அனைத்தும் உயிரற்றவையாய்தான் இருக்கின்றன
உனை ப்ரதிபலிக்கும்வரை
அல்லது
உனை பூசி உயிருள்ளவையாய் மாறிவிடுகின்றன.

நீ விரும்புகிறாயா என்று உறுதிப்படுத்தமுடியாத 
அனைத்து நேரங்களிலும்
அப்போது கடந்துபோகும்
வேறொருத்தியின் சிணுங்கல்களின் நொடிப்பொழுதில்
லயித்துவிடுகிறது பாவமிந்தமனம்.
மீண்டும் உனை நினைக்கும்போது
ஏதோவொரு நெருடல் மிஞ்சுகிறது,
சில நிமிடங்கள் உன்னையே நினைத்தபின்
ஈர்ப்பைமீறிய காதல் உன்மீது.
எனக்கும் விருப்பமில்லைதான் இந்த இருதலைக்கொள்ளித்தனம்
நொடி சிந்தாத உனக்கேவான என் காதல்
உன் கைகளில்மட்டுமே.
அதுவரை அலைபாயும் இந்த மனதிற்கு
என்ன சொல்லி ஆறுதல்படுத்த?

 

“Sometimes there’s so much beauty in the world I feel like I can’t take it, like my heart’s going to cave in.”
– Ricky Fitts (Wes Bentley), American Beauty (1999).

 

நண்பன் மணிக்கணக்காய் செல்போனில் பேசும்போதும்,
டிவியின் சேனல் மாற்றங்களில்
நொடிப்பொழுதில் வந்துவிழும் அந்த பாட்டிலும்,
அண்ணனின் காதல் பரிசுகளைப்பார்க்கும்போதும்,
நொடிதாண்டிப் பார்க்கும்
ஏதோ ஒரு பெண்ணை கடக்கும்போதும்,
எல்லா கல்யாணப்பொழுதுகளிலும்,
காதல் படங்களின் முடிவிலும்,
உனக்காக எங்கோ உருகத் தொடங்குகிறது எனது பனி
இருந்தும்
இன்னமும் தெரியவில்லை
நீ யாரென்று!

 

You stay alive, no matter what occurs! I will find you. No matter how long it takes, no matter how far, I will find you.”
– Hawkeye (Daniel Day-Lewis), The Last of the Mohicans (1992).

நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
காத்திருக்கும் நமக்கான காதல்.
என்றாவது காதல் பேசுவோமென்று பல நாள் ஏமாந்து,
சலித்து நாம் சந்திக்கையில்
தென்படுவதேயில்லை.
அன்று விளையாட்டாய் பயந்து
எனை இறுகப்பிடித்து
நெடுநேரம் கழித்து நீ உணர்ந்தபோது
சத்தம் போடாமல் அருகே அமர்ந்திருந்தது!
இயல்பான அதன் சிரிப்புடன்
கைகுலுக்கி கண்ணடித்துச்சென்றுவிட்டது.

அவள் குரலில் மயக்கப்பட்ட தொனிந்த தோரணை,
குழைவில் சதம் பெண்மை கூட்டியிருந்தாள்,
அன்றைய அவன்-அவள் வாக்கியங்களுக்காகவும்
அந்த காட்சிக்காகவும்
என் புலன்கள் அவமானப்பட்டு
ஓர் மயிரிழையில் என் மூளை
தற்கொலை செய்திருந்தது.
அன்றுதான் என் முதல் நிர்வாணம்
துன்பம் கூட்டப்பட்ட ரணம்.
துரோகத்தின் காயத்தில்
ஏளனக்கத்தியை குத்தியிருந்தாள்.
அவள் பிம்பம் படிந்த இதயத்திற்காய்
மன்னிக்கப்படவேண்டி கீழே விழுந்திருந்தது என் நிழல்.
உணர்ச்சி மறுத்து வலை சிதறிய சிலந்தியாய் நான்.
தொலைந்த லட்சியம் தொடர
சிலந்தியின் எச்சிலாய் என் நம்பிக்கை மட்டும்.

* 2006 ஆம் அண்டு ‘வானவில்’ தமிழ்ச் சங்கப் போட்டியில் மூன்றாம் பரிசுபெற்றது.

அந்த சவரக்கடையின் கண்ணாடிகளில்
ஒரு எண்ணின் பெரிய அடுக்காய் பெருகியிருந்தது
என் பிம்பங்கள்.
அத்தனைமுறை பிரதிபலித்தபோதும்
நல்லவேளை நான் யோசிப்பவற்றை காட்டிக்கொடுக்கவில்லை
பின்,
என்னையே பல என்னால் பார்த்தேன்
சரிசெய்துகொண்டேன் கலைந்திருந்த எனக்கான வசீகரிப்புகளை.

உனைப்பற்றிய சிற்ச்சில வசிகரத்தில்
லயிக்கத் தொடங்கியது என் கவனிப்புகள்.
பிரமாண்டமாக வளர்ந்துநின்றது உனைப்பற்றிய அனைத்தும்.
அது நிச்சயம் காதல் அல்ல
ஒரு பெண்மைக்கான அங்கிகாரம்மட்டுமே.
சகிக்கமுடியாத உன் செய்கைகளின்பின்
உன் பிம்பங்களை வளர்த்துநின்ற மனதில்
அன்று
நீ பேசும்போது
CNN தலைப்புச்செய்தியோன்று
நினைவில் வந்து மறைந்தது.
கைவிடப்பட்டவைகளை
கைவிடப்படப்படாதவைகளாய் மாற்றமுடிவதில்லை அவ்வளவு எளிதில்!

Third eye

Stat

  • 10,726 visitors

Visitors

Visitors

Advertisements