You are currently browsing the monthly archive for September 2008.

 

உனைப் பற்றிச் சொல்ல
குறிப்பாய் ஒன்றுமில்லை
ஆனால்
எப்படியும் பார்த்துவிட நினைக்கிறேன்
முட்டிமோதி பஸ்சில் ஏறிய பின்னும்
கலையாமல் உன் முகத்தில் அப்பியிருக்கும்
எனக்கான அந்த சிரிப்பை

Advertisements

எல்லோருக்கும் எட்டப்பார்த்தால் வானவில்,
எனக்கு மட்டும்
என் கையருகில்…
நீ

 

பலகீன ஒளி இருளில் 
உன்னைப்பற்றிய ஏதோ ஒன்று கசிகிறது
மேலும் மேலும் கசிந்து
என்னை முழுகிவிட முயல்கிறது.
வெளியில் பெரும் நிசப்தம்
உள்ளே பேரிரைச்சல்.
ஒவ்வொரு நாளும்…
நீயும் எனை விரும்புகிறாய் என்று தெரிந்த நாள் முதல்
சகஜமாகிப்போனது எல்லாமே!

உனைப்பற்றிய ஒவ்வொரு துகளாய் சேர்த்தேன்
உன் வெட்கம்
சிரிப்பு
கவனிப்பு
கொஞ்சல்களென
இவைஅனைத்தும்வைத்து
கொஞ்சங்கொஞ்சமாய்
எதையோ கட்டிக்கொண்டிருந்தேன்
கடல் மணலில் கோபுரம்கட்டிய குழந்தை போல்
ஒரு பரவசம் பொங்கி படர்ந்துகொண்டிருந்தது
அன்று வேறொருவனுடன் உனை பார்க்கும்வரை.
அப்புறம்
மிகவும் அந்நியமாகிப்போனது
நான் கட்டியது.
உள்ளே நான் வாழவுமில்லை,
இடிக்கவும் மனமில்லை,
நினைவுச்சின்னமாக்கவும்முடியவில்லை.
விட்டு வந்துவிட்டேன்.

முதலில் உனை எப்போது பார்த்தேன் என்ற நினைவேயில்லை
பொருட்படுத்தவுமில்லை.
கவனிக்கவைத்தாய்
காதலென்ற எதையோ என்னுள் புகுத்தினாய்
புகுத்தி
ஏங்கவைத்தாய்
உயிரை மட்டும் உனக்கேற்ற முறுகலாய் கருக்கினாய்
விழித்து வக்கிரத்தால்
கொஞ்சம்கொஞ்சமாய் உப்புப் படிகமாகி
உனை மறக்க நினைத்தபோது
எதுவும் தெரியாததுபோலவே கொஞ்சி
எனை உன்னுள் கரைத்தாய்.
மீண்டும் மீண்டும் உப்பாகிறேன்
மீண்டும் மீண்டும் கரைகிறேன்.
இப்போதும்
சகஜமாய் பழகி
தூரமாய் போய் மறந்துவிடும் நண்பர்களகிவிடலாம்
என்ன சொல்கிறாய்?

உன்னுடன் பழகும் நூறு நண்பர்களில்
ஒருவனாய் இருக்கமுடியாது இனிமேலும்.
உனக்கான
புவியீர்ப்பை மீறிய என் காதலை
சிலருடன் போட்டியாக விடவும்முடியாது.
இப்போது,
இலையைத் தின்று முடித்து
காம்பு நோக்கி நகரும் புழு நான்,
செடியாய் வளர்ந்துநிற்கும் இந்த காதலை
என்ன செய்ய?
முழுவதையும் தின்றுவிடவா?
பட்டாம்பூச்சியாய் பறந்துவிடவா?
அல்லது
பூச்சிகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளவா?

அந்த ஒரு வரியை வாசித்தான்
ஏதோ ஒன்று இழுத்தது அதனுள்ளே
மீண்டும் மீண்டும் தன்னுள் ஒலிக்கவிட்டான்
அவனுள் அது வளர்ந்தது
அப்போதுதான் உணர்ந்தான்
அது அவனின் வாழ்நாள் கர்பமென்று
மீண்டும் தன்னுள் ஒலிக்கவிட்டான்
அது அவனில் முடிவிலாத அர்த்தங்களை உருவாக்கியது.
அர்த்தங்களை இழந்து
அவன் மனதுடன் ஒத்ததிர்ந்து* பேரலையானது.
யாரும் கவனிக்காத பின்னொருநாளில்
ப்ரம்மமானான்.

* ஒத்ததிர்தல் – Resonance

This poem is inspired by கீதை அகம்.
நன்றி: ஜெயமோகன்.

சரியான இருட்டு அது
தினமும் பகலை முழுமையாக கடித்து தின்றது.
என் அறையின் ஓரமாய் ஒளிந்திருந்த
மஞ்சள் வெளிச்சத்தையும் சேர்த்து தான்.
இருட்டின் வக்கிரம் குறைய ஆரம்பித்ததே
பகலை தின்றுவிட்டேனென்று நினைத்தபோதுதான்.
களைப்பில்
கொஞ்சம் தூங்கிவிட்டது.
விழித்து பார்க்கும்போது
பகலும் மீள முயற்சித்தது
நேற்று தோற்றதால் ஏற்பட்ட வக்கிரத்தால் ஜெயித்துவிட்டது!
இருட்டுக்கு இன்னமும் தெரியவில்லை
முழுசாய் பகலை தின்றுவிட்டேனென்று நினைத்தால்தான் அது தோற்றதென்று
பாவம் அந்த இருட்டு!

 

அழுதுகரைத்த உன் ஞாபகங்கங்களின்
ஒவ்வொரு துளியும் பெருகி
சகிக்காத ஒரு சிவப்பு ஆறாய்
என் எல்லா பாதைகளின் ஓரங்களிலும்
துரத்தி வந்தது

முதலில் மிரட்டியது
மிரண்டேன்
கட்டளையிட்டது
அடிபணிந்தேன்
பிறகு,
களிம்பு பூசிவிடும் நண்பனானேன்
கொஞ்சம் விழித்தேன்
அதன்பின்
கவனிப்பிற்காகவும் பிறகு அன்பிற்காகவும் கெஞ்சியது
உதசினப்படுத்தினேன்
அழுதது.
இப்போது,
சிறு பையன்கள் மூத்திரம் போகும் சாக்கடையானது

 

புத்தன்போல் புலனடக்கி
புலன் தட்டி உணர்த்தும் அனைத்தும் அடக்கியபின்
தனிமையின் உக்கிரம் நிரம்பியிருக்கும்
நிசப்த இருட்டில்
மழைக் காலத்து காளான்களாய்
முளைத்து விடுகின்றன
உன் எண்ணங்கள்,
வழக்கத்திற்கும் அதிகமாக…

கோவில் பிரகாரத்து இருட்டின்
ஒற்றை அகல் விளக்காய்
மனம் முழுக்க நிறைந்து
கண்களில் வழியும் என் காதலை
மொழிகள் தோற்றுப்போன இடத்தில்
வார்த்தைகளில் சொல்லவும் வேண்டுமா?

நிதானமாய் பலநாட்கள் யோசித்து
திடமான ஒருமுடிவென்று நினைத்துதான்
அன்றைய இரவில்
குளிரில் விரல்கள் எரிய
ஆழமாய் புதைத்தபின்
காலையில் முளைத்துநிற்கும் உன்மீதான என் காதலை
நீரூற்றி வளர்க்காமல்
என்ன செய்ய?

அவசரமாக சோப்புபோட்டு முகம் கழுவி
உடைமாற்றி
தலைசீவி
இரண்டுமுறை கண்ணாடி பார்த்து
எல்லாம் சரிசெய்தபின்
நீ வரவில்லை என்று தெரிந்ததும்
விகாரமாய் இருந்தது எல்லாமே!