உன் சொற்களின் அகலம் அதை சொன்ன நேரத்தைவிட
பின்யோசிப்புகளில் அதிகமாக நீண்டுவிடுகிறது
அந்தந்த காலங்களிலேற்படும் உன்பற்றிய நினைவுகளே
அதை தீர்மானிக்கின்றன

போட்டிபோட்டுகொண்டிருந்த நம் பரஸ்பர வசிகரிப்பில்
ஏதோ பாதி சொல்லி நிறுத்திக்கொண்ட
உன் வார்த்தைகளை முட்டிமோதி நம் காதலை வளர்க்க
வசதியாய் இருந்தது உன் பச்சை நினைவுகள்.
நம் திருமணமான சண்டைகளின் பின்
நீ தவறவிட்ட சொற்களின் ஆழங்களில்
அமிலங்கள் மட்டுமே சுரந்து காத்திருக்கிறது
நம் அடுத்த சண்டைகளில் வீசுவதற்காக

அந்தந்த காலங்களிலேற்படும் உன்பற்றிய நினைவுகளே
உன் சொற்களின் அகலத்தை தீர்மானிக்கின்றன

Advertisements